தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் கதிராமங்கலம் (குத்தாலம் அருகில்) எங்கள் SVR ஆர்கானிக் வே பண்னையில் பாரம்பரியமாக சுமார் 80 ஏக்கர் குடும்ப மற்றும் நண்பர்கள் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். நாங்கள் 1985ம் ஆண்டு முதல் தமிழ் நாடு விவசாயத்துறை, NSC, மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கு நெல், பருத்தி, பயறுவகைகள், சோயா, சில காய்கறி பயிர்கள் விதை உற்பத்தி செய்து அளித்துள்ளோம்.
கடந்த 2012 முதல் இயற்கை முறையில் நெல், கரும்பு, வாழை, பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து வருகிறோம். 1992ம் ஆண்டு முதல் விவசாய நடைமுறைச் செலவினங்கள் அதிகமானதுடன் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் குறைய ஆரம்பம் ஆனது. 2002 ஆண்டு முதல் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் பற்றாக்குறையும், அபரிமிதமான இடுபொருள் விலையேற்றம், பருவநிலை மாற்றம் காரணமாக தொழில் மேளாண் விவசாய முறைக்கு (Industrial Agriculture) மாற்றியமைத்தோம். இதன் மூலம் நவீன இயந்திரங்கள் மற்றும் நவீன உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தத் தொடங்கினோம். உதாரணமாக நடவு இயந்திரம், களைஎடுக்கும் இயந்திரம், டிராக்டர், பவர்டில்லர், போன்ற உபகரணங்கள், தண்ணீர் பாய்ச்ச பைப் லயன், ஸ்பிரிங்ளர், சொட்டுநீர் பாசன வசதிகள், விவசாய விளை பொருட்கள் கொண்டு செல்ல வயல் வழி ரோடு போன்ற வசதிகளைச் செய்தோம். இதற்கான முதலீடுக்கான கடன் வட்டி போன்ற சுமையுடன், பருவநிலை மாறுபாடு, அதிக ரசாயன பயன்பாட்டால் மண் தரம் இழந்து நுண்ணூட்ட பற்றாக்குறை மற்றும் அதிகமான இயந்திர பயன்பாட்டால் மண் கடினமடைந்த காரணமாக பயிர் மகசூல் குறைவும், இடுபொருள் விலையேற்றம், விளைபொருட்களுக்கான போதுமான விலை இல்லாமையினால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்படத் தொடங்கியது.
இதனிடையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உழவர்களுக்கான இளநிலை பண்ணை தொழில்நுட்பம் கல்வி கற்கத் தொடங்கினேன். இதன் மூலம் பயிர் மற்றும் பண்ணை மேளாண்மையில் நுட்பங்களளை அறிந்துகொண்டேன். ரசாயன முறை, இயந்திர மற்றும் அறிவியல் தொழில் நுட்பம் மூலம் அதிக முதலீடு தேவை, உறுதிசெய்யமுடியாத மகசூல், உறுதியில்லாத சந்தை வாய்ப்பு மற்றும் போதுமான விலை இல்லாமை போன்ற காரணிகள் நீடித்த நிலைத்த விவசாயத்துக்கு சாத்தியம் இல்லை மற்றும் இது அயல் நிறுவனங்களுக்கு நன்மை அளிப்பதுடன், விவசாயத்தில் நஷ்டத்தை ஏற்படுத்தி கடினமாக்கியதை உணர்ந்தோம்.
எனது தந்தை திரு. S.V.ராமமூர்த்தியின் 60 வருட விவசாய அனுபவதில் இதற்கு மாற்றாக நாம் பசுமைபுரட்சிக்கு முன் பாரம்பரியமாக கடைபிடித்து வந்த இயற்கை வழி வேளாண்மை மற்றும் சுயசார்பு நுட்பத்தின் மூலம் எளிமையான முறையில் குறைந்த செலவு, அதிக மககசூல் கிடைக்கும் என்பதையும் அறிந்து அதற்க்கான முயற்சியை தூண்டினார். திரு. நம்மாழ்வார் அவர்களிடம் பயிற்சி எங்களது விவசாயத்தில் எளிமை, குறைந்த முதலீடு, வெளி சந்தை இடு பொருட்களை தவிர்த்தல், கனரக இயந்திர பயன்பாடு தவிர்த்தல் மூலம் சுயசார்பு விவசாயத்துக்கு அடிப்படை அம்சமாக்கினோம். திரு நம்மாழ்வாரின் வழிகாட்டலின்படி எங்கள் பகுதியில் உள்ள இயற்கை விவசாயிகளை அணுகி அவர்களின் அறிவுறுத்தலின்படி எங்கள் பண்ணை முழுவதையும் இயற்கைவழி விவசாயத்திற்கு மாற்றி அமைத்தோம். உதாரணமாக நெல் விவசாயத்தில் நமது பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி, நிரந்தர வேளாண்மை, திரு ஆலங்குடி பெருமாள் தொழில் நுட்பம் போன்றவை மூலம் விவசாய நடைமுறைச் செலவினங்கள் பெரும் அளவு குறைந்தது. அத்துடன் உழவுத் தொழில் எளிமையானது. . இதில் மற்ற விவசாயிகளையும் ஈடுபடுத்தும் வண்ணம் அவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்கவும், இயற்கை வழி வேளாண்மையை மேம்படுத்தவும் அனுபவமிக்க இயற்கைவழி உழவர்களைக் கொண்டு எங்கள் பண்ணையில் ஒரு பகுதியை நெல்லுக்கான இயற்கை வழி ஆராய்ச்சிக்கு பயன்படுத்தி வருகிறோம். இதில் பாரம்பரிய நெல் ரகங்களை நடவு செய்து அதன் குணாதிசயம், பருவம், நடவுமுறை, கலப்பினமில்லாத நல்ல விதை தேர்வு (PURE LINE SELECTION) போன்றவை, மற்றும் நடவுமுறையில் அடர் நடவு, தொடர்நடவு, மிஷின் நடவு, SRI நடவு முறை மற்றும் திரு ஆலங்குடி பெருமாள் நடவுமுறை போன்றவை. இயற்கை இடுபொருட்களான பஞ்சகவ்யா, ஜீவாமிருதம், பூச்சி விரட்டி, மீன் அமிலம், தேமோர் கரைசல் மற்றும் பல இடுபொருட்களை சுயசார்பு முறையில் தாமே தயாரித்து பயன்படுத்தி நிலத்தையும், சுற்றுப்புறச் சூழ்நிலைகளையும் பாதுகாத்தல்,இதனை மற்ற சக விவசாயிகள் அறிந்துகொள்ளும் வகையில் கழனித் திருவிழாவாக பயிர் நடவின் பொழுது நடவுத் திருவிழா, பயிர் வளர்ச்சி பருவ நிகழ்ச்சி, அறுவடை தருணத் திருவிழா என 3 நிலை நிகழ்ச்சி மூலம் திரு நெல் ஜெயராமன் முன்னிலையில் இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைத்து கூடி கலந்துரையாடல் அனுபவ பகிர்வு செய்து மேம்படுத்தி வருகிறோம். இதன் மூலம் கடந்த சம்பா பருவத்தில் 16 வகை பாரம்பரிய நெல் ரகங்களை SRI நடவு, அடர் நடவு, திரு ஆலங்குடி பெருமாள் முறையில் நடவு செய்தோம்அதில் எங்கள் பகுதியில் சுமார் 2 டன் மகசூல் கொடுக்கக்கூடிய தூயமல்லி, கிச்சிடி சம்மா, கருடன் சம்பா ரகங்களும், சுமார் 1.5 டன்னுக்கு மேல் விளையக்கூடிய சீரக சம்பா, மாப்பிளை சம்பா, சிகப்பு கவுனி, பூங்கார், மற்றும் சராசரி விளைச்சல் அளிக்கக்கூடிய இலுப்பை பூ சம்பா, கருப்புகவுனி, வாலன், பாசுமதி போன்றவை அறியப்பட்டது. இந்த நிகழ்வின் மூலம் விவசாயிகள் பயிர்களை நேரடியாக தேர்வு செய்ததுடன், நடவுமுறை சாகுபடி நுட்பங்கள், அனுபவ பகிர்வு பெற்று இயற்கை வழி விவசாயம் மற்றும் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து பயன்பெற்றனர்.
இந்த வருடம் சம்பா பருவத்தில் சுமார் 30 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளோம். இதில் 60 நாளில் அறுவடை வரக்கூடிய 60ம் குருவை முதல் 180 நாளில் அறுவடைக்கு வரக்கூடிய காட்டுயானம் உட்பட, சிகப்பு, கறுப்பு, பழுப்பு, வெள்ளை அரிசி ரகங்கள், மருத்துவ குணம் கொண்ட இலுப்பைப்பூ சம்பா, கறுப்புகவுனி, கருங்குருவை, பூங்கார் போன்ற ரகங்கள், உணவுக்கான அரிசி தூயமல்லி, கிச்சிடிசம்பா,
சொர்ணாமசூரி போன்ற ரகங்கள் வாசணை அரிசி ரகங்களான சீரக சம்பா, இலுப்பைப்பூ சம்பா போன்ற ரகங்கள், பலகாரம் செய்வதற்கான கருடன் சம்பா, வாலன், கொட்டாரசம்பா போன்ற ரகங்கள் சுமார் 3 அடி முதன் 8 அடி உயரம் வளரக்கூடிய மாப்பிள்ளை சம்பா, மடுமுழுங்கி, காட்டுயானம், குழியடிச்சான், வரப்பு குடைஞ்சான் போன்ற ரகங்களை சாகுபடி செய்துள்ளோம். இதன் மூலம் அதிக மகசூல் மற்றும் உணவு பயன்பாட்டுக்கான ரகங்களை தேர்வு செய்தல்பருவநிலை மாற்றத்தினால் இந்த வருடம் ஒட்டுரக நெல் ரகங்கள் அதிக பூச்சி நோய் தாக்குதலுக்கு உட்பட்டு அதிக மகசூல் இழப்பு ஏற்பட்டது. ஆனால் நமது பாரம்பரிய நெல் ரகங்கள் எந்தவித இடுபொருளும் இல்லாமல் தாங்கி நல்ல விளைச்சலை அளித்துள்ளது. சுயசார்பு விவசாயமுறை மூலம் இயற்கை இடுபொருட்களான பஞ்சகவ்யா, ஜீவாமிருதம், பூச்சி விரட்டி, மீன் அமிலம், தேமோர் கரைசல் போன்றவை மற்ற ரசாயன மற்றும் வெளி சந்தை இடுபொருட்களை விட அதிகமான பலன் அளிக்கும் மேலும் மத்திய அரசின் இயற்கை உழவர்களின் பங்கீட்டு முறையில் வழங்கபடும் PGS-India Organic Certificatation பெற்று, அத்துடன் மற்ற இயற்கை விவசாயிகளுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்து தருகிறோம். இதனால் நமது இயற்கை விவச்சாயிகள் சான்றுபெற்ற இயற்கை விவசாயியாக பதிபெற்று பலன் அடைந்து வருகின்றனர். அனுபவமிக்க இயற்கை விவசாயிகளைக் கொண்டு கழனி திருவிழா மூலம் நடவு நிலை, பயிர் வளர்ச்சி நிலை, அறுவடை நிலையில் விவசாயிகளின் அனுபவ பகிர்வு, பயிற்சி, கலந்தாய்வு போன்றவை மூலம் மற்ற விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி மேலும் பல விவசாயிகள் இயற்கை வழி விவசாயத்துக்கு திரும்பி பாரம்பரிய நெல் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருவது. இயற்கை வழி விவசாயம் மற்றும் நமது பாரம்பரிய நெல் ரகங்களின் வெற்றியாகும்
One thought on “ஏன் மாறினோம்?”
It is amazing. Need to make awareness meeting at district levels. With proper planning and well advanced information state capital meeting is suggested. Do we have any ROI figures ??